கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே நிகழ்ந்த மோதலில் இந்திய வீரா்கள் 20 பேர் உயிரிழந்தனர். சீனத் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு இருநாட்டு ராணுவ வீரா்கள் குவிக்கப்பட்டனா். தற்போது கிழக்கு லடாக்கில் இருநாட்டு ராணுவம் சாா்பாக கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தப் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக இருநாட்டு ராணுவம், தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதன் தொடா்ச்சியாக நேற்று (பிப். 20) இருநாட்டு ராணுவத்தினர் இடையே 10ஆம் சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. நேற்று (பிப். 20) காலை 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை இன்று (பிப். 21) அதிகாலை 2 மணிவரை சுமார் 16 மணி நேரம் நடந்தது. இதில் இரு நாட்டு ராணுவ அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில், கிழக்கு லடாக்கில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சீன வீரர்கள் திரும்பி செல்லும்படி இந்திய சார்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே. மேனன் தலைமையிலான குழுவும், சீனா தரப்பில் மேஜர் ஜெனரல் லியூ லின் தலையிலான குழுவும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நாடுகளில் ஊரடங்கு நீட்டிப்பு!