டெல்லி: அமெரிக்கா, சீனா, ஜப்பான், கொரிய குடியரசு மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கரோனா(Corona) தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், “கரோனா தொற்றின் அதிகரிக்கும் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, INSACOG மூலம் தொற்றின் மாறுபாடுகளை கண்காணிக்க அவற்றின் மாதிரிகளின் முழு மரபணு வரிசை முறையையும் உருவாக்குவது அவசியம். இதுபோன்ற பயிற்சியானது, நாட்டில் புழக்கத்தில் உள்ள புதிய கரோனா தொற்று மாறுபாடுகளை சரியான நேரத்தில் கண்டறிந்து, அதற்குத் தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும்.
முன்னதாக பரிசோதனை - பின்பற்றுதல் - சிகிச்சை - தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கரோனா தொற்றுக்கு தேவையானவற்றை பின்பற்றுதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா கவனம் செலுத்தியதால், கரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடிந்தது. எனவே அனைத்து கரோனா தொற்று மாதிரிகளும் தினசரி அடிப்படையில், INSACOG மரபணு வரிசை ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்ய அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
மேலும் ஜூன் 2022இல் மத்திய சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட கரோனா வழிகாட்டுதல்கள், சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட கரோனா வழக்குகளை முன்கூட்டியே கண்டறிதல், தனிமைப்படுத்துதல், சோதனை செய்தல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுதல் ஆகியவற்றைக் கண்டறிந்து புதிய கரோனா வைரஸை கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "எங்களது வீட்டில் நாங்கள் இருப்பதில், உங்களுக்கு என்ன பிரச்னை?" - ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!