புதுச்சேரி : நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கடற்கரை சாலை காந்தி சிலை அருகே புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றினார். காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு பதக்கங்கள் வழங்கினார். தொடர்ந்து சாரணர் அணிவகுப்பு மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற அணிவகுப்பு நடைபெற்றது.
வருவாய் இழப்பு
விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, சரக்கு மற்றும் சேவை வரி இலக்கு அடிப்படையிலான வரிவிதிப்பு கொள்கையின் காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசம் வருவாய் இழப்பை சந்தித்து வருவதாகவும், எனவே மத்திய அரசு இழப்பீட்டு காலத்தை 5 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை சுமார் 7.60 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டுதாகவும் , அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளின் மூலம் கரோனா தொற்று பரவலின் விகிதமும் இறப்பு விகிதமும் கணிசமாக குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். "அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
காய்கறித்தோட்டம்
மேலும் அவர் கூறியதாவது, "புதுச்சேரி மாநிலம் வேளாண்மையை அடிப்படையாக கொண்டது என உணர்ந்து விவசாயிகளுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரி மக்களுக்கு தேவையான தரமான காய்கறிகளை அவர்கள் வீட்டு மாடியிலேயே உற்பத்தி செய்யும் வகையில் ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம் அமைக்க 200 மதிப்புள்ள காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 2000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. பசுமையான புதுச்சேரி ஆக மாற்றும் வகையில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
உதவித்தொகை
புதுச்சேரியில் மாதந்தோறும் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், விதவைகள் முதிர்கன்னிகள் திருநங்கைகள், கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு 500 ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
எட்டு வழிச்சாலை
புதுச்சேரியில் பாரம்பரியமிக்க எட்டு வழிச்சாலையை தனியார் பங்களிப்புடன் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க பொலிவுறு நகர சட்டத்தின் கீழ் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகரம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனிஜெயக்குமார் தலைமை செயலர் அஸ்வின் குமார், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். எனாம் பிராந்தியத்தில் அமைச்சர் சாய் சரவணகுமார், மாகே பிராந்தியத்தில் அமைச்சர் லட்சுமி நாராயணன் , காரைக்காலில் அமைச்சர் சந்திரபிரியங்கா ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
இதையும் படிங்க : 75ஆவது சுதந்திர தின விழா: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களை பாராட்டிய பிரதமர்!