இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 2-க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
அசாமில் கடந்த 10ஆம் தேதி தொடங்கிய முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்திலும், 12ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் வென்று தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்நிலையில், 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் இலங்கை பந்துவீச்சை திறனுடன் கையாண்டு துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
42 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய முன்னாள் கேப்டன் விராட் கோலி, சுப்மான் கில்லுடன் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இலங்கை பந்துவீச்சை நாலாபுறம் பறக்க விட்டு இருவரும் வாண வேடிக்கை காட்டினர்.
அதிரடியாக ஆடிய விராட் கோலி அவ்வப்போது 97 மீட்டர் உள்பட நீண்ட தூரங்களுக்கு சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். 46-வது சதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி, தொடர்ந்து அதிரடி காட்டி இலங்கை வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். மறுபுறம் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
116 ரன்கள் விளாசிய சுப்மான் கில் வெளியேறிய நிலையில், மறுபுறம் விராட் கோலி 150 ரன்களை கடந்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி 166 ரன்கள் குவித்து இறுதி வரை களத்தில் நின்றார்.
391 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் முதலே சறுக்கலாக அமைந்தது. தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னான்டோ 1 ரன்னில் வெளியேறினார். அடுத்தடுத்து களமிறங்கிய இலங்கை வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இலங்கை வீரர்கள் திணறியது கண்கூட காண முடிந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து இலங்கை வீரர்கள் விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். கடந்த ஆட்டத்தில் சதம் அடித்த இலங்கை கேப்டன் தசன் சன்கா சிறிதுநேரம் போராடி வீழ்ந்தார். 11 ரன்கள் மட்டும் எடுத்து சனகா வெளியேறினார்.
இறுதியில் 22 ஓவர்கள் முடிவில் 73 ரன்கள் குவித்து இலங்கை அணி ஆல்-அவுட் ஆனது. கசுன் ரஜிதா 13 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்று போராடினார். இதன் மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளும், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றி இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் என இரு விருதுகளையும் முன்னாள் கேப்டன் விராட் கோலி தட்டிச் சென்றார்.
இதையும் படிங்க: IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு