அகர்தலா (திரிபுரா): திரிபுரா மாநிலத்தின் அகர்தலா பகுதியில் எச்.ஐ.வி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக திரிபுரா எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் இயக்குநர் டாக்டர் டெபர்மா கூறுகையில், “ஊசி மருந்துகளின் பயன்பாட்டால் எச்.ஐ.வி பாசிட்டிவ் நிலைமை அதிகரித்து வருகிறது.
இது ஆபத்தானது. எச்.ஐ.வி எய்ட்ஸ் மற்றும் ஊசி பயன்பாட்டிற்கு எதிராக அகர்தலா முனிசிபல் கார்ப்பரேஷனின் அனைத்து கவுன்சிலர்களுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகிறோம். நாங்கள் அகர்தலா முனிசிபல் பகுதிகளில் வார்டு வாரியாக விவாதத்தை நடத்துவோம். அதேநேரம் இப்பகுதிகளில் நிலைமையை மதிப்பாய்வு செய்வோம்.
கடந்த ஆண்டுகளில் மேற்கு மாவட்டத்துடன் ஒப்பிடும்போது, மாநிலத்தின் பிற மாவட்டங்களில் எச்.ஐ.வி தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் கடந்த சில மாதங்களில் அகர்தலா நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்த பகுதிகளில் சுமார் 300 எச்.ஐ.வி நோயாளிகள் இருக்கின்றனர். கடந்த மூன்று மாதங்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அகர்தலா முனிசிபலின் 59 வார்டுகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமான வார்டுகளில் மக்கள் ஊசி மருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலானோர் 16 - 24 வயதுக்குட்பட்டவர்கள்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிகிச்சைக்கு சென்ற முதியவர் - எய்ட்ஸ் நோய் என தவறாக அறிக்கை அளித்த தனியார் மருத்துவமனை