நாட்டின் 15ஆவது குடியரசுத்தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்றார். இன்று நாடெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் "திரெளபதி முர்மு" என்ற பெயர், அவரது இயற்பெயர் இல்லை என முர்மு கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒடியா மொழி சேனல் ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர், தன்னைப் பற்றிய பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில்,"திரெளபதி எனது உண்மையான பெயர் இல்லை. சந்தாலி இனத்தில் பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள மூதாதையர்களின் பெயர்களைத்தான் குழந்தைகளுக்கு வைப்பார்கள். அதனால், அந்தப்பெயர்களுக்கு அழிவே இல்லை. அவ்வாறு எனக்கு குடும்பத்தினர் வைத்த பெயர் புதி.
திரெளபதி என்ற பெயர் எனது ஆசிரியர் வைத்தது. எனது ஆசிரியருக்கு புதி என்ற பெயர் பிடிக்கவில்லை என, மகாபாரதத்தில் வரும் கதாப்பாத்திரமான திரெளபதியின் பெயரை எனக்கு வைத்தார். வங்கி ஊழியரை திருமணம் செய்து கொண்ட பிறகு, திரெளபதி முர்மு என்று பெயர் மாறிவிட்டது.
ஆண்கள் ஆதிக்கம் அதிகரித்துக்காணப்படும் அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும். அரசியல் கட்சியினர் பெண் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்த வேண்டும். பெண்கள் தரமான அரசியலில் கவனம் செலுத்த வேண்டும். தங்கள் அதிகாரத்தைப்பெற பெண்கள் குரல் எழுப்ப வேண்டும். மக்கள் பிரச்னைகளை சரியான தளத்தில் எடுத்துக்கூற வேண்டும்" என்று கூறியிருந்தார்.
'நான் இறந்துவிடலாம் என நினைத்த காலம் அது': கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் மற்றொரு பத்திரிகைக்குப் பேட்டியளித்த அவர், தனது மகனின் மரணம் குறித்து உருக்கமாக கூறியிருந்தார். "எனது மகன் லஷ்மண் இறந்ததால் நான் மனமுடைந்துவிட்டேன். சுமார் இரண்டு மாதங்கள் வீட்டிலேயே முடங்கிவிட்டேன். யாரையும் சந்திக்கவில்லை.
பின்னர், யோகா மற்றும் தியானம் செய்ய ஆரம்பித்தேன். 2013-ல் எனது இளைய மகன் சிபுன் சாலை விபத்தில் இறந்தார். அதைத்தொடர்ந்து சகோதரர் மற்றும் தாயாரும் இறந்தனர். எனது கணவர் 2014ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். ஆறு மாதங்களில் எனது குடும்ப உறுப்பினர்கள் மூன்று பேர் இறந்தனர்.
அது எனது வாழ்க்கையில் மிகப்பெரும் சுனாமியாக இருந்தது. நான் இறந்துவிடலாம் என்று நினைத்த காலம் அது. அதையெல்லாம் மன உறுதியுடன் தாண்டி வரவேண்டி இருந்தது" என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க:குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரெளபதி முர்மு