டெல்லி: டெல்லியில் நேற்று(நவ.15) ஒன்பது மாத கர்ப்பிணி ஒருவர், தனது கணவருடன் கர்நாடக மாநிலம் ஹூப்ளி செல்வதற்காக, இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமான நிலையத்தின் மூன்றாவது டெர்மினலில் காத்திருந்தபோது, திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக விமான நிலையத்தில் இருந்த மருத்துவர்கள் குழு கர்ப்பிணியை அழைத்துச் சென்று மகப்பேறு சிகிச்சை அளித்தது. அதில், பெண்மணிக்கு குழந்தை பிறந்தது.
இந்த செய்தியை விமான நிலைய நிர்வாகம் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளது. குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அதிகாரிகள், "எங்களது மிக இளைய பயணியை வரவேற்கிறோம். டெர்மினல் மூன்றில், மேதாந்தா மருத்துவ மையத்தில் பிறந்த முதல் குழந்தையின் வருகையை கொண்டாடுகிறோம். தாயும் சேயும் நலமாக உள்ளனர். இந்திராகாந்தி விமான நிலையத்தில் குழந்தை பிறந்தது இதுவே முதல் முறை.
மருத்துவ அவசர நிலைகள் ஏதேனும் இருந்தால் சமாளிப்பதற்காக, நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் டெர்மினல் 3இல் எப்போதும் தயார் நிலையில் உள்ளனர். விமான நிலையத்தின் அனைத்து டெர்மினல்களிலும் மேதாந்தா மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளனர்.