திருவனந்தபுரம் (கேரளா): கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் அரிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க தொல்பொருட்களை தவறாகப் பயன்படுத்தியாக மோன்சன் மாவுங்கல் கைது செய்யப்பட்டார். இதன் மூலம் அவர் மீது 10 கோடி ரூபாய் ஏமாற்றி சம்பாதித்தாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இவர் சமீப காலங்களில் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஐஜி லக்ஷ்மன் கேரள குற்றப்பிரிவு காவல் துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் இந்த வழக்கு தொடர்பாக நான்காவதாக கைது செய்யப்பட்ட நபர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் கேரள குற்றப்பிரிவு காவல் துறை அறிக்கை தாக்கல் செய்து இருந்தது.
அதில், “தொல்பொருள் விற்பனை தொடர்பாக பொருளாதார மோசடி நடந்ததில் ஐஜி லக்ஷ்மன் மூளையாக செயல்பட்டவர். எனவே, அவர் மீது சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது இது குறித்து நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக எங்களுக்கு முக்கிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளன.
கைது பயத்தின் அடிப்படையில், ஐஜி லக்ஷ்மன் விசாரணைக்கு ஆஜராவதில்லை. எனவே, இவர் மீதான இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டு இருந்தது. முன்னதாக, இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கிய கேரள உயர் நீதிமன்றம், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு உத்தரவிட்டு இருந்தது.
ஆனால், இரண்டு முறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் ஐஜி லக்ஷ்மன் ஆஜராகவில்லை. எனவே தான் ஐஜிக்கு எதிராக காவல் துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐஜி லக்ஷ்மன் தரப்பில் ஆயுர்வேத சிகிச்சைக்காக வெள்ளாயணி செல்ல இருப்பதாக கூறப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள குற்றப்பிரிவு காவல் துறை தரப்பு, திருவனந்தபுரத்திலேயே சிறந்த ஆயுர்வேத மருத்துவமனைகள் இருப்பதாக கூறியது. மேலும், தனது ஐபிஎஸ் பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிய காவல் துறை, மோன்சன் உடன் ஐஜி லக்ஷ்மன் இருக்கும் புகைப்படங்கள் தங்களிடம் இருப்பதாகவும், ஐஜி - மோன்சன் பேசிய தொலைபேசி உரையாடல்கள் அதன் இருப்பிட முகவரி உடன் சேகரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தது.
இந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் கலமசேரியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான ஐஜி லக்ஷ்மனை கேரள குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இதுவே, ஐஜி லக்ஷ்மன் விசாரணைக் குழு முன்னர் ஆஜராவது முதல் முறை ஆகும்.
இதையும் படிங்க: மார்கதர்சி சிட்பண்ட் வழக்கு - ஆந்திர சிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்றங்கள் அதிரடி உத்தரவு