காசு தேடி வருதுனா யாருக்குதான் விட மனசு வரும். தெலங்கானாவின் வனபர்த்தி நகரில் உள்ள ஏடிஎம் ஒன்றில், 100 ரூபாய் எடுக்கும் மக்களுக்கு 500 ரூபாய் அலேக்காக கிடைத்துள்ளது. அவர்கள் வங்கி கணக்கில் 100 ரூபாய் மட்டுமே குறைந்துள்ளது. அதே போல, 1000 ரூபாய் எடுப்போருக்கு, 5 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.
இந்தத் தகவல் காட்டுத்தீ போல் பரவ தொடங்கியுள்ளது. கடந்த மூன்று நாள்களாக, அப்பகுதி வாசிகள் மறைமுகமாக ஏடிஎம்மில் பணத்தை எடுத்து வந்துள்ளனர். ஏடிஎம் வெளியே அதிகப்படியான கூட்டம் நின்று கொண்டிருந்ததை கவனித்த காவல் துறையினர், விசாரணை நடத்தியுள்ளனர். அதில், பணம் ஐந்து மடங்காக கிடைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, உடனடியாக ஏடிஎம் வளாகத்தை காவல் துறையினர் மூடிவிட்டு, சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர்.
இதுதொடர்பாக வங்கி ஊழியர்கள் கூறுகையில், "தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக பணம் வந்துள்ளது. இதை ஆராய்ந்து பார்கையில், தவறுதலாக 100 ரூபாய் வைக்க வேண்டிய இடத்தில், 500 ரூபாய் நோட்கள் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஏடிஎம்மில் பணத்தை டெபாசிட் செய்தது முதல் தற்போது வரை 5 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்குகளை கண்டுபிடித்து, கூடுதலாக கிடைத்த பணம் திரும்ப வசூலிக்கப்படும்” என்றார்.