ஆக்ரா (உத்தரப்பிரதேசம்): ஐஐசி ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. 50 ஓவர் கொண்ட இந்த உலகக் கோப்பை தொடர், அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 10 அணிகள் இதில் கலந்து கொள்ள இருக்கின்றன.
இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பங்களாதேஷ், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய எட்டு அணிகள் நேரடியாக கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள இரண்டு அணிகள், தகுதிச் சுற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளன.
ஹைதராபாத், அகமதாபாத், தரம்சாலா, டெல்லி, சென்னை, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய பத்து மைதானங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 46 நாட்களுக்கு போட்டிகள் நடைபெற உள்ளன. ஐஐசி ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது.
அதன் பிறகு பாதுகாப்பு கருதி சில மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக, அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நவராத்திரி பண்டிகை தொடங்குவதால் அன்றைய போட்டியை ஒத்தி வைக்கும்படி காவல் துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பபட்டது. அதன்படி அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டது.
திருத்தப்பட்ட அட்டவணையை ஐஐசி கடந்த 9ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி, இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் அக்டோபர் 15ஆம் தேதிக்கு பதிலாக, 14ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல், இந்தியா - நெதர்லாந்து ஆட்டம் நவம்பர் 11ஆம் தேதியில் இருந்து 12ஆம் தேதிக்கும், பாகிஸ்தான் - இலங்கை ஆட்டம் அக்டோபர் 12ஆம் தேதிக்கு பதிலாக 10ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டது. இந்த ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 25ஆம் தேதி தொடங்கவுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்களைக் கவரும் வகையில் ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் டிராபியை சுற்றுப் பயணமாக பல்வேறு நகரங்களுக்கும் கொண்டு செல்கிறது.
அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 16) உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவுக்கு டிராபி கொண்டு செல்லப்பட்டது. குறிப்பாக, முக்கிய சுற்றுலாத் தலமான தாஜ்மஹாலில் டிராபி வைக்கப்பட்டது. இதனை ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். தாஜ்மஹாலில் டிராபி வைக்கப்பட்ட புகைப்படத்தை ஐஐசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், "இன்னும் 50 நாட்களே உள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பை தகுதிச்சுற்று 2023: அப்ஸ்டாக்ஸ் அணி அறிவிப்பு!