பெங்களூரு: நீலகிரி மாவட்டம் குன்னூரில் டிசம்பர் 8ஆம் தேதி முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, 11 ராணுவப் பணியாளர்கள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக விபத்து ஏற்பட்ட அன்றே அறிவிக்கப்பட்டது. குரூப் கேப்டன் வருண் சிங் 80 விழுக்காடு தீக்காயத்துடன் மீட்கப்பட்டார்.
14 பேரும் உயிரிழப்பு
முதலில், வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விமானப்படை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு வருண் சிங் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (டிசம்பர் 15) உயிரிழந்தார். முன்னதாக இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், உயிருக்குப் போராடிவந்த வருண் சிங்கும் மரணமடைந்ததால், ஹெலிகாப்டரில் சென்ற அனைவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி இரங்கல்
பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "குரூப் கேப்டன் வருண் சிங் இந்திய தேசியத்திற்குப் பல வீரமிக்கச் சேவைகளை ஆற்றியுள்ளார்.
அவரது மறைவால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். நாட்டிற்காக அவர் ஆற்றிய சேவை என்றும் மறக்க முடியாதது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். குடியரசுத் தலைவரும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் இரங்கல்
மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரான, குரூப் கேப்டன் வருண் சிங்கும் இப்போது உயிருடன் இல்லை என்ற சோகமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.
அவரது வீரமும், அர்ப்பணிப்பும் அனைவருக்கும் உத்வேகமாக அமையும். மேலும் அவர் நம் மனத்தில் என்றும் வாழ்வார்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மிக்-17வி5 ரக ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணம் என்ன?