ஹைதராபாத்: ஹைதராபாத் அடுத்த முசி ஆற்று படுகையான திகலகுடா எனும் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு கருப்பு பை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பையை எடுத்து ஆய்வு செய்துள்ளனர்.
அதில் பெண் ஒருவரின் தலை மட்டும் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், முதற்கட்டமாக சுமார் 750 காவல்நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்து தகவல் திரட்டியுள்ளனர். ஆனால் அதன் மூலம் குற்றவாளியை நெருங்க முடியாது என நினைத்து, சந்தேகத்திற்கு இடமான பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
சுமார் 100 மணி நேரம் அடங்கிய அந்த பதிவுகளில் சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவர் ஆட்டோவில் ஏறி இறங்கும் காட்சிகள் சில கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து விசாரணையை முடுக்கி விட்ட போலீசார், குற்றவாளியின் வீட்டை சுற்றி வளைத்தனர். அங்கு ஆய்வு செய்தபோது குளிர்சாதன பெட்டியில் கொலை செய்யப்பட்ட பெண்ணில் உடல் பாகங்கள் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த வீட்டின் உரிமையார் சந்திரமோகனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்: ஹைதராபாத் அடுத்த தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர் அனுராதா (55 வயது). இவர், சந்திரமோகன் என்பவரின் வீட்டில் சில ஆண்டுகளாக வாடகைக்கு இருந்து வந்துள்ளார். அந்த பழக்கத்தில் ஷேர் மார்க்கெட் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என சந்திரமோகன் அனுராதாவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அனுராதா தன்னிடம் இருந்த ரூ.7 லட்சத்தை சந்திரமோகனிடம் கொடுத்துள்ளார்.
அந்த பணத்தை வாங்கி ஏப்பம் விட்ட சந்திரமோகன், அனுராதா அந்த பணத்தை திரும்ப கேட்கவே பல்வேறு காரணங்களை சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அனுராதா கடந்த 12ஆம் தேதி சந்திரமோகனிடம் பணத்தை திரும்ப கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரமோகன் அவரின் வீட்டில் வைத்து அனுராதாவை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார். மேலும், கத்தியால் அனுராதாவின் உடலை துண்டு துண்டாக வெட்டிய சந்திரமோகன் உடல் பாகங்களை தனது வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார்.
தொடர்ந்து உடலில் இருந்து தனியாக வெட்டி எடுத்த அனுராதாவின் தலையை கருப்பு கவரில் பொதிந்து ஹைதராபாத் அருகே உள்ள மூசி ஆற்றில் வீசிச்சென்றுள்ளார். அதுமட்டுமின்றி, அனுராதாவை கொலை செய்த பிறகு உடலை எப்படி மறைப்பது என்பது குறித்து கூகுலில் தேடியதாகவும், துர்நாற்றம் விசாமல் இருக்க பெர்ஃயூம் மற்று ரூம் ஸ்ப்ரே பயன்படுத்தியதாகவும் சந்திரமோகன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நடைபெற்றவை: அனுராதாவின் உடல் பாகங்களை மீட்ட போலீஸார், உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சந்திரமோகன் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதற்காக பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை அப்பகுதி மக்களிடையே பெரும் பதட்டத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'வாணி ராணி' சீரியல் இயக்குநரின் மனைவி தற்கொலை.. நடந்தது என்ன?