ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த மென்பொறியாளர் பிரசாந்த். இவர், தனது ஆன்லைன் காதலியை பார்ப்பதற்காக 2017ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளார். ஆனால் காதலியை காண்பதற்கு முன்பே பாகிஸ்தான் காவல்துறை அவரை கைது செய்தது.
இதனையடுத்து அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அவரை விடுவித்த பாகிஸ்தான் அரசு, வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக, பிரசாந்தின் தந்தை பாபுராவ், தெலங்கானா மாநிலம், சைபராபாத் காவல் ஆணையரிடம் தனது மகனை விடுவிக்க உதவுமாறு கோரியிருந்தார். மேலும் இந்த விவகாரத்தை மத்திய அரசின் கவனத்திற்கும் அவர் கொண்டு சென்றார்.
இந்நிலையில், குடும்பத்தாரின் தொடர்ச்சியான முயற்சிகளால், பிரசாந்த் இன்று மாலை வீடு திரும்ப உள்ளார். இதனால் மகிழ்ச்சியில் உள்ள குடும்பத்தினர், அவரை வரவேற்க தயாராகி வருகின்றனர். பிரசாந்த், விடுதலைக்கு முயற்சி செய்த அனைத்து தரப்பினருக்கும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கில் வென்றது நீதி: மனம் உடைந்து அழுத காதலி