போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்தவர் தஹேர் கான். அஞ்சும் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட தஹேர், பின்னாட்களில் அவருடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக விவாகரத்து செய்ய முடிவெடுத்து உள்ளார். இது தொடர்பாகத் தம்பதியினர் விவாகரத்து மனு தாக்கல் செய்து உள்ளனர்.
இதனிடையே ஹமிதியா என்ற மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட தஹேர், அவருடன் தனியாக வசித்து வந்துள்ளார். ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பாக அஞ்சும் மற்றும் தஹேர் தம்பதி இடையே தொடர் பிரச்சினை இருந்தது வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் தொடர்ந்து சண்டையிட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மகன் மற்றும் உறவினர்களுடன் கணவரின் இரண்டாவது மனைவி வீட்டிற்குச் சென்ற அஞ்சும் அங்கு ரகளையில் ஈடுபட்டுள்ளார். அஞ்சும் மற்றும் தஹேரின் இரண்டாவது மனைவி ஹமிதியா ஆகியோரிடையே வார்த்தை போர் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், குளித்துக் கொண்டு இருந்த தஹேர் சத்தம் கேட்டு வந்து மனைவிகள் இருவரது சண்டையையும் தடுக்க முயன்றுள்ளார். இதில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது. குண்டடி காயத்துடன் தஹேர் கீழே சரிந்து விழுந்துள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தஹேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து பேசிய போலீசார், "குண்டடி காயத்துடன் தஹேர் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது இரண்டாவது மனைவியும் காயம் காரணமாகச் சிகிச்சை பெற்று வருகிறார். கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் எனத் தெரியவராத நிலையில், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" இவ்வாறு கூறினர்.
இதையும் படிங்க: BAFTA awards 2023: ஜெர்மனி படத்திற்கு 7 விருது! விருதை கோட்டை விட்ட இந்திய இயக்குனர்!