சிக்கபல்லாபூர் (கர்நாடகா): கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரின் புறநகர் பகுதியில் உள்ள பெல்லம்பெல்லா தேசிய நெடுஞ்சாலை பகுதியில், இன்று (அக்.26) அதிகாலை நடந்த கோர விபத்தில் குழந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி டாடா சுமோவில் 15 பேர் பயணம் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், இன்று அதிகாலையில் டாடா சுமோ தேசிய நெடுஞ்சாலை 44-இல் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சிக்கபல்லாபூர் புறநகர் பகுதியில் நின்று கொண்டிருந்த சிமெண்ட் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுமோவில் பயணித்த 15 பேரில் குழந்தைகள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சைக்காக சிக்கபல்லாபூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: குலசை தசரா திருவிழாவில் மூன்றரை பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு - கதறும் பக்தர்!
இந்நிலையில், இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது நடத்தப்பட்ட சோதனையில், சுமோவில் பயணித்தவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இறந்தவர்களில் பலர் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளனர்.
அதிகாலையில் ஏற்பட்ட அதிக பனிமூட்டத்தின் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.