சமீபத்தில், மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையின் தீர்ப்பு ஒன்று பெரும் விமர்சனத்துக்குள்ளானது. ஆடையைக் கழற்றாமல் மார்பைத் தொடுவது போக்சோ சட்டத்தின்படி பாலியல் வன்முறை அல்ல என நாக்பூர் கிளை நீதிபதி ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், 12 வயது சிறுமியை பழம் தருவதாகக் கூறி, அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆடையைக் கழற்ற முயற்சித்த 39 வயது நபரின் சிறைத் தண்டனையையும் நீதிபதி புஷ்பா கணேடிவாலா குறைத்தார். முன்னதாக, கீழமை நீதிமன்றம் அவருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது.
இந்த தீர்ப்பு பெரும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது. முன்னதாக, வழங்கப்பட்ட தீர்ப்பையே மிஞ்சும் அளவுக்கு தற்போது அதே நீதிபதி, மற்றொரு கருத்தை தெரிவித்துள்ளார். சிறுமியின் கைகளைப் பிடிப்பதும் பேண்ட் ஜிப்பை கழற்றுவதும் போக்சோ சட்டத்தின்படி பாலியல் வன்முறை அல்ல எனக் கூறியுள்ளார்.
கடந்த 2018ஆம் பிப்ரவரி 12ஆம் தேதி, 50 வயது நபர் ஒருவர் 5 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்குள்ளாக்கியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம், இந்திய தண்டனைச் சட்டம் 354-A (1) (மானபங்கம்), 448 (வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல்), பிரிவு 8 (பாலியல் வன்முறை), 12 (பாலியல் துன்புறுத்தல்) போக்சோ சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் அவருக்கு ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதற்கு எதிராக அவர், மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா கணேடிவாலா, "மானபங்கம் அல்லது பாலியல் தொந்தரவு செய்யும் நோக்கில் சிறுமியின் வீட்டிற்குள் குற்றம்சாட்டப்பட்டவர் நுழைந்தார் என்பதை அரசுத் தரப்பு நிரூபித்துள்ளது. ஆனால், பாலியல் வன்முறை செய்ய நுழைந்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை.
போக்சோ சட்டத்தின் படி, ஆடையைக் கழற்றாமல் மார்பைத் தொடுவது பாலியல் வன்முறை அல்ல. சிறுமியின் கையைப் பிடித்ததாகவும் பேண்ட் ஜிப்பை கழற்றியதாகவும் சாட்சி (பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார்) கூறியுள்ளார். ஆனால், இச்செயல் பாலியல் வன்முறையின் கீழ் வராது என நீதிமன்றம் கருதுகிறது.
ஆனால், இந்திய தண்டனைச் சட்டம் 354-A (1), 12 ஆகிய பிரிவுகளின் அவர் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, குற்றம்சாட்டப்பட்டவர் ஐந்து மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். எனவே, இதனைக் கருத்தில் கொண்டு அவர் மீது வேறு வழக்குகள் பதிவு செய்யவில்லை எனில் அவரை விடுவிக்கலாம்" என்றார். அந்த 50 வயது நபருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் நீதிமன்றம் நீக்கியுள்ளது.