மலப்புரம்: கேரளாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கரிப்பூர் அருகே வீடு ஒன்று கனமழை காரணமாக பாதியில் கட்டப்பட்டு கொண்டிருந்த கட்டடம் இடிந்து, அருகே இருந்த குடியிருப்பின் மீது சரிந்துள்ளது.
இதனால், அந்த வீட்டில் இருந்த ஆறு மாத குழந்தையும், அதன் எட்டு வயது சகோதரியும் உயிரிழந்தனர். இச்சம்பவம், இன்று (அக். 12) அதிகாலை 4.30 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இரு குழந்தைகளும் கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
கனமழை நீடிக்கும்
கேரளாவில் நேற்று (அக். 11) முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று மாநிலத்தின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
கிழக்கு-மத்திய அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு காரணமாக சுழற்சி, அடுத்த மூன்று நாள்களுக்கு நீடிக்கும். இதன் விளைவாக, அக்டோபர் 11 முதல் 15 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.