போபால்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபாரூகியின் பிணை மனுவை இந்தூர் மாவட்ட நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு அன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய முனாவர், இந்து மதக் கடவுள்கள் குறித்தும், உள் துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் அநாகரிகமான கருத்துகளைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அன்று அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பாஜக எம்எல்ஏவின் மகன் அப்போது முனாவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நிகழ்ச்சியை நிறுத்தியுள்ளார். மேலும், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, அநாகரிகமாக முனாவர் பேசியது தொடர்பான காணொலியையும் சமர்ப்பித்துள்ளார்.
அதனடிப்படையில், ஜனவரி 1ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட முனவார் கடந்த சில நாள்களுக்கு முன்பு பிணை கேட்டு மனு தாக்கல்செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் நிரகாரித்திருந்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் முனாவர் பிணை கேட்டு மனு தாக்கல்செய்திருந்த நிலையில், அந்த மனுவையும் இன்று (ஜனவரி 28) நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பிணை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஆதரவான சாட்சியங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லையென்றும், ஆனால், கைப்பற்றப்பட்ட காணொலி குறித்து விசாரணை நடைபெற்றுவருவதால் முனாவருக்கு பிணை வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'அனைத்துவித சவால்களை எதிர்கொள்ளும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு' - பிரதமர் மோடி