உத்தரப்பிரதேசத்தில் ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை தினமும் வழிபட அனுமதி கோரி, இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதை வீடியோவாக பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பலத்த பாதுகாப்புடன் நடந்த இந்த கள ஆய்வில், மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கள ஆய்வு நடத்த அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கை நீதித்துறையில் அனுபவம் வாய்ந்த மூத்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும், மசூதியில் சிவலிங்கம் உள்ளதாக கூறப்படும் பகுதியை பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவு நீடிப்பதாகவும், கள ஆய்வு தொடர்பாக தகவல்கள் கசிவதை தடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.