அகில இந்திய காங்கிரசின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வத்ரா (52) பிரிட்டன் தலைநகர் லண்டன் பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைச் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில், பினாமி பெயரில் வாங்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
வத்ராவின் வாக்குமூலம்
இது தொடர்பாக அமலாக்கத் துறையும், வருமானவரித் துறையும் தனித்தனியே வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றன.
இதனிடையே, கடந்த 4ஆம் தேதி டெல்லியின் சுக்தேவ் விஹார் பகுதியில் அமைந்துள்ள ராபர்ட் வத்ராவின் வீட்டுக்கு வந்த வருமானவரித் துறையினர் அவரது வாக்குமூலத்தைப் பதிவுசெய்தனர். இந்தச் சோதனை நாடு முழுவதும் பேசுபொருளானது.
திசைதிருப்பவே குற்றச்சாட்டு
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராபர்ட் வத்ரா, “இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பல தலைமுறைகளாகச் சேவை செய்துவரும் ஒரு குடும்பத்துடன் தொடர்புடையவன் நான். அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கவே பினாமி சொத்துக்குவிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்பட்டுள்ளன.
என் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்த்து மிக நீண்ட காலமாகப் போராடிவருகிறேன். மத்திய பாஜக அரசு, எப்போதெல்லாம் பிரச்சினையைச் சந்திக்கிறதோ அப்போதெல்லாம் என்னை முன்னிறுத்தி அதனைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்; இவை வெறும் வதந்திகள்தான். எனக்கு அதில் எந்தவொரு தொடர்பும் இல்லை. எந்தவொரு அடிப்படை ஆதாரங்களும் இன்றி, அவர்கள் என் மீது இந்தப் பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்துவருகின்றனர்.
இனி நாடாளுமன்றத்தில்தான்...
பணமதிப்பிழப்பு, பொருளாதார வீழ்ச்சி, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் என எப்போதெல்லாம் இந்த அரசுக்குச் சிக்கல் எழுகிறதோ அப்போதெல்லாம் அதனை மடைமாற்ற இத்தகைய அணுகுமுறையைக் கையாளுகிறது.
அவதூறுகளுக்குத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து நான் சோர்ந்துபோய்விட்டேன். இனி அதனை எதிர்க்க வேறு வகையான செயல்வடிவை நான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பினாமி சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகளுக்கு இனி நான் நாடாளுமன்றத்தில்தான் பதிலளிக்க வேண்டும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான் பயணப்பட்டிருக்கிறேன்; பரப்புரை செய்திருக்கிறேன்; மக்களுடன் நேரம் செலவழித்திருக்கிறேன்.
நேரடி அரசியலுக்கு வரும் வத்ரா?
நான் அரசியலில் இல்லாததால் அவர்கள் இப்போது என்னைத் தொந்தரவு செய்கிறார்கள். அரசியலிலிருந்து எப்போதுமே விலகியே நிற்கிறேன். நான் அரசியலுக்கு வந்தால்தான் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய முடியும் எனச் சொல்லவில்லை.
ஆனால், அரசியலுக்கு வந்தால் என்னால் அதிகளவு நல்லது செய்ய முடியும். பிறகு நான் ஏன் அதைச் செய்ய தயங்க வேண்டும். என்ன இருந்தாலும் மக்கள்தான் அதனை முடிவுசெய்வார்கள். சரியான நேரத்தில் அது குறித்து உறுதியான முடிவெடுப்பேன்.
எப்போதும் பிரியங்கா துணை
எனது குடும்பத்தினர் அதை ஏற்றுக்கொண்டால், நான் அரசியலில் கால்த்தடம் பதிப்பேன். அரசியல் அரங்கில்தான் எனது பிரச்சினைகளை எதிர்த்துப் போராட முடியும். என் முடிவுகளுக்குப் பிரியங்கா எப்போதும் துணைநிற்பார்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்தியாவில் குறையும் கரோனா தொற்று!