கரோனாவால் பாதிக்கப்பட்ட ஹரியானா அமைச்சர் அனில் விஜ் குர்காவுன் மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். மூத்த பாஜக தலைவரான அவர், தற்போது அம்பாலாவில் உள்ள தனது வீட்டில் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
டிசம்பர் 15ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. முன்னதாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இறைவனின் அருளோடும், மருத்துவர்களின் இரவு பகல் பாராத முயற்சியாலும் உங்களின் பிரார்த்தனையாலும் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளேன். அனைவருக்கும் நன்றி" எனப் பதிவிட்டிருந்தார்.
பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ஐசிஎம்ஆர்) இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை மூன்றாம்கட்ட சோதனையில் ஹரியானா அமைச்சர் அனில் விஜ், தாமாக முன்வந்து கடந்த நவம்பர் 20ஆம் தேதி செலுத்திக் கொண்டார்.
இதற்கிடையே, அமைச்சர் அனில் விஜ்ஜூக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவர் கரோனாவால் பாதிப்படைந்ததைத் தொடர்ந்து, மருந்தின் நம்பகத்தன்மை குறித்து பலர் கேள்வி எழுப்பினர். கோவாக்சின் மருந்தின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டு 14 நாள்களுக்குப் பிறகே அதன் பலன் கண்டறிப்படும் என பாரத் பயோடெக் நிறுவனம் பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.