பிரயக்ராஜ்: ஞானவாபி மசூதி வளாக சுவற்றில் உள்ள இந்துக் கடவுள்களின் உருவங்களை வழிபட அனுமதி கோரி கடந்த 1991ஆம் ஆண்டு இந்து பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மசூதியில் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி கள ஆய்வு நடத்தி வீடியோ பதிவு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கள ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மசூதி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், கள ஆய்வுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே 1991ஆம் ஆண்டு தொடரப்பட்ட மூல வழக்கை ரத்து செய்யக்கோரி, ஞானவாபி மசூதி நிர்வாகமான அஞ்சுமன் கமிட்டி தாக்கல் செய்த மனு அகலாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொல்லியல் துறை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த வழக்கு நேற்று(அக்.18) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தொல்லியல் துறை சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வரும் 31ஆம் தேதி வரை அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு 1991ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளதால், இதுவே கடைசி வாய்ப்பு என்றும், அலகாபாத்தில் உள்ள சட்டப் பணிகள் குழுவில் 10,000 ரூபாயைச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 31ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ தொகை செலுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.