குஜராத் மாநிலம் போர்பந்தர் - மஹூவா இடையே கடந்த திங்கட்கிழமை இரவு 'டவ்-தே' புயல் கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 190 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. தாழ்வான பகுதிகளிலிருந்து 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், நேற்றிரவு 9 மணி நிலவரப்படி, டவ்-தே புயலானது வலுவிழந்த நிலையில், குஜராத்தின் தீசாவிலிருந்து 120 கி.மீ தொலைவிலும், அகமதாபாத்திற்கு மேற்கே 35 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது
இந்தப் புயலின் காரணமாக குஜராத்தில் 16 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. 40 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள், ஆயிரத்துக்கும் மேலான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. புயல் பாதிப்பு காரணமாக குஜராத் மாநிலத்தில் மட்டும் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
புயலின் தீவிரத்தன்மை காரணமாக, குஜராத்தில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் வரும் மே.20 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.