அகமதாபாத்: 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதி இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ளது.
இந்த முறையும், ஆட்சியை தக்கவைக்க குஜராத்தில் முகாமிட்டு தீவிர வாக்குசேகரிப்பில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள், நட்சத்திர வேட்பாளர்கள், கோடீஸ்வரர்கள் என பா.ஜ.க.வின் வேட்பாளர்கள் தேர்வு மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு உள்ளது.
மறுபுறம், பா.ஜ.க.வுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றன. வேட்புமனு முடிந்து பிரசாரம் தொடங்கிய நிலையில், வேட்பாளர்கள் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணி என அடுத்தடுத்து மூன்று இடங்களில் பிரதமர் மோடி பரப்புரை நிகழ்த்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதலில் சுரேந்திராநகர் செல்லும் பிரதமர் மோடி, அடுத்து ஜபுசார், மற்றும் நவ்சாரி என அடுத்தடுத்த இடங்களுக்கு சென்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று 4 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். மேலும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் குஜராத் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பா.ஜ.க. உறுப்பினர்களுக்கு ஆதரவாக வாக்கு சேரிக்கிறார்.
இதையும் படிங்க: தழிழக அரசால் முடியாவிட்டால் மத்திய அரசிடம் டேன் டீயை ஒப்படையுங்கள் - அண்ணாமலை