இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள நிதியமைச்சர், 43ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மே 28ஆம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கும். இந்தக்கூட்டத்தில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், கரோனா தடுப்பூசிகள் மீது விதித்துள்ள ஜிஎஸ்டி வரியைக் குறைக்கவும், நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகைகளை வழங்கவும் மாநில அரசுகள் வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசுகள் வலியுறுத்தல்
இது குறித்து நேற்று (மே.14) பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழ்நாட்டின் முதலமைச்சர், நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகைகளை விடுவிக்கவேண்டும் எனவும், பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரியை மத்திய அரசு மாநில அரசுகளுடன் பகிர்ந்துகொள்ளாததால் அதற்கு மானியத்தை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், பஞ்சாப்பின் நிதியமைச்சர் மன்பிரீத் பாடல், கரோனா மருத்துவ உபகரணங்கள் மீதான வரியைக் குறைப்பது குறித்து விவாதிப்பதற்கு உடனடியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
மேலும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த ஆறு மாதங்களாக கூடவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்த அவர், மாநில அரசுகளிடம் ஆலோசிக்காமலும், மாநில சட்டப்பேரவைகளை கருத்தில் கொள்ளாமலும் ஜிஎஸ்டி விதிகளில் கணிசமான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என, காட்டமான விமர்சனத்தையும் முன்வைத்திருந்தார். முன்னதாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி கூடியிருந்தது.
மம்தா, சோனியா காந்தியின் கோரிக்கை
மேற்கு வங்கத்தின் நிதியமைச்சர் அமித் மித்ரா கடந்த சில வாரங்களுக்கு முன்பு, "ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒவ்வொரு நிதிக் காலண்டிலும் கூட வேண்டும். அதனை இரண்டுமுறை மத்திய அரசு மீறிவிட்டது. காணொலி வாயிலாகக் கூட கூட்டத்தை மத்திய அரசு கூட்டவில்லை" என விமர்சித்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடந்த மாதம், கரோனா பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காக்கும் மருந்து, கரோனா மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் எனக் கோரியிருந்தார். இதே கோரிக்கையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் மத்திய அரசிடம் வைத்திருந்தார்.
இதையும் படிங்க: நிதி வழங்காமல் கூட்டாட்சி பற்றி பேசுவதா? - மோடிக்கு கனிமொழி கண்டனம்!