சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்த நிலையில், சசிகலா இன்று சிறையிலிருந்து விடுதலையானார். இதற்கான கடிதத்தை பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து, விக்டோரியா மருத்துவமனை நிர்வாகத்திற்கு முறைப்படி இன்று வழங்கப்பட்டது. இதையடுத்து சசிகலாவிற்கு வழங்கப்பட்டிருந்த சிறைப்பாதுகாப்பு இன்றுடன் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், விக்டோரியா மருத்துவமனை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், “சிறை வாழ்க்கை முடிந்து சசிகலா விடுதலையாகியிருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு இன்னும் உடல்நிலை சீராக வேண்டியுள்ளது. அதற்காக அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியுள்ளது. அதன்பிறகே, அவரை சென்னைக்கு அழைத்து வருவது பற்றி முடிவெடுக்க முடியும்” என்றார்.
தொடர்ந்து, சசிகலா தொடர்பான அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்க தினகரன் மறுத்துவிட்டார். சசிகலா இன்று விடுதலையாகியுள்ள நிலையில், ஏராளமான ஆதரவாளர்கள் மற்றும் அமமுகவினர் விக்டோரியா மருத்துவமனை முன் திரண்டுள்ளனர்.
இதையும் படிங்க: சிறைவாசம் முடிந்தாலும் மருத்துவக் கண்காணிப்பில் சசிகலா!