டெல்லி: குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் (PM CARES for children)திட்டம் கடந்த ஆண்டு மே 29ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டம், 2020 மார்ச் 11ஆம் தேதி முதல், 2022 பிப்ரவரி 28ஆம் தேதி வரையிலான கரோனா காலத்தில், கரோனா தொற்றால் பெற்றோர் அல்லது வளர்ப்பு பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக தொடங்கப்பட்டது.
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தங்குமிடம், கல்வி, உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்குவது, அவர்களுக்கு தன்னிறைவு அளிப்பதற்காக 23 வயது வரை 10 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிப்பது, மருத்துவ காப்பீடு வழங்குவது உள்ளிட்டவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நிலையில், குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி நாளை (மே30) வழங்கவுள்ளார் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காணொலி மூலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், மாநில அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வார்கள் என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து திட்டப் பயனாளிகளான குழந்தைகள், அவர்களது பாதுகாவலர்களுடன் காணொலி வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி