புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஆகஸ்ட் 24ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி ஆளுநர் மாளிகை (ராஜ்நிவாஸ்) சென்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க வருமாறு துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசைக்கு அழைப்புவிடுத்தார்.
புதுச்சேரியில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு ஆட்சியமைத்துள்ளது. இக்கூட்டணி அரசின் முதல் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் இன்று துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இன்று மாலை நிதிநிலை அறிக்கைத் தாக்கலாகிறது.
ஆளுநர் தமிழில் உரை
இந்த நிதிநிலை அறிக்கையின் ஆளுநர் உரையை தமிழிசை தமிழில் நிகழ்த்துகிறார். புதுச்சேரி சட்டப்பேரவையில் முதன்முதலில் ஆளுநர் உரையைத் தமிழில் நிகழ்த்த உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிதிநிலை அறிக்கைக்கு இதுவரை இல்லாத அளவிற்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடுசெய்யப்படுகிறது.
தமிழில் பதவி ஏற்ற முதல் தமிழச்சி: தமிழிசை 'கை'யில் புதுச்சேரி!
நிதிநிலை அறிக்கையின் மூலம் புதுச்சேரி மக்களுக்கு நல்ல திட்டங்கள் வந்துசேரும் என முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழைசை தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”புதுச்சேரியின் 15ஆவது சட்டப்பேரவையில் முதல் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரின் தொடக்க உரையை வழங்குவதில் மகிழ்ச்சி.
புதுச்சேரியில் தமிழில் பதவியேற்றேன். தற்போது ஆளுநர் உரையைத் தமிழில் நிகழ்த்த உள்ளது பெரும் மகிழ்ச்சி. மொழி என்பது சிந்தனையின் ஆடை. தாய்மொழி என்பது குழந்தைக்குத் தாய்ப்பால் போன்றது. நீங்கள் ஒருவரிடம் ஒரு மொழியில் பேசினால் அவர் புரிந்துகொள்வது அவரது தலைக்குச் செல்லும். அதுவே அவருடைய தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்திற்குச் செல்லும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : புதுச்சேரியில் முதன்முதலாக தமிழில் ஆளுநர் உரை - தமிழிசை சௌந்தரராஜன்