விஷு பண்டிகை, சித்திரை மாத பூஜைக்களுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஏப்ரல் 10ஆம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து நேற்று வழக்கம்போல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில் நேற்று மாலை கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் சபரிமலை கோயிலில், சாமி தரிசனம்செய்தார். தனது மகன் கபீருடன் பம்பை வந்த அவர் அங்கு இருமுடி கட்டி, பெரிய நடைப்பந்தலுக்கு நடந்தே சென்றார்.
தொடர்ந்து தலையில் இருமுடியை சுமந்துகொண்டே 18ஆம்படி வழியாக ஐயப்பனை தரிசனம்செய்தார். இவரது வருகையை ஒட்டி சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் ஆளுநருக்குச் சிறப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கும் சித்திரை மாத சிறப்பு பூஜை ஏப்ரல் 18ஆம் தேதி நிறைவுபெற்று அன்றைய தினம் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.