டெல்லி: காப்பீடு தொடர்பான புகார்களுக்கு ஆன்லைன் மூலம் தீர்வு, புகார்களை விசாரிக்க ஆணையம் அமைத்தல் உள்ளிட்ட சில அம்சங்களுடன் மத்திய அரசு, காப்பீட்டு விதிகளில் சில முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
அந்தத் திருத்தங்களின்படி, காப்பீட்டு நிறுவனங்கள், முகவர்கள், தரகர்கள் வழங்கும் சேவைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அவர்கள் நேரடியாக இதுதொடர்பான, புகார்களை லோக்பால் நிர்வாகக் குழுவிடம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணும் பொருட்டு ஆன்லைன் போர்ட்டல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தாண்டி, புகார்களை விரைந்து விசாரித்து தீர்வு காண்பதற்காக காப்பீட்டு நிறுவனத்தினர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய விதிகளின்படி, காப்பீட்டு நிறுவனக் கவுன்சில், நிர்வாகக் குழுவின் பொறுப்புகளை ஏற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று இந்த புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், இதில் ஏற்படும் சிக்கல்கள் அனைத்தையும் ஆன்லைன் வாயிலாக கண்காணிக்கவும் இந்த திருத்தங்கள் உதவுகின்றன. இதன் மூலம் நுகர்வோர் உரிமைகளும், அவர்களது பாதுகாப்பும் மேம்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.