அகமதாபாத்: குஜராத் மாநிலம், வதோதரா அருகே கடந்த 2017ஆம் ஆண்டு, கந்துவட்டி பிரச்னையில் இரும்புக் கடை உரிமையாளர் அனில் ராம்தேஜ் என்பவர் நடுரோட்டில் இரும்பு ராடால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நிகில் பர்மார் என்பவரைக் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு அகமதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திலீப்சிங், நிகில் பர்மார் மக்கள் நடமாடும் பொதுவெளியில் இந்த கொலையைச் செய்துள்ளார் என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாவும், குற்றம்சாட்டப்பட்டவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதைப் பதிவு செய்த கூடுதல் அமர்வு நீதிபதி சர்கா வியாஸ், இரும்புக் கடை உரிமையாளரை அடித்துக்கொண்ட நிகில் பர்மாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதுபோன்ற குற்றங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், வதோதராவில் கந்துவட்டி பிரச்னையால் பல கொலைகள் நடந்துள்ளதால், இதில் கடுமையான தண்டனை வழங்க வேண்டியது அவசியம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.