டெல்லி: ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில், தலைநகர் டெல்லியில் நாளை (செப்.9) நாளை மறுநாள் (செப். 10) தேதிகளில் நடைபெற உள்ளது. முதன்முறையாக ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், இந்தியாவின் பல்வேறு தலைநகரங்களில் நடைபெற்ற ஜி20 மாநாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் ஜி20 மாநாட்டின் உச்சி மாநாடு (G20 Summit) தலைநகர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் (செப்.9, 10) நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், பிரதிநிகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் ரஷ்யா, சீனா அதிபர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. உலகின் வல்லரசு நாடுகளான சீனா, ரஷ்யா ஜி20 மாநாட்டில் பங்கேற்காதது பல தரப்புகளில் இருந்தும் பல்வேறு கருத்துகள் வெளியாவதற்கு வழிவகுத்தது. மேலும் ஜி20 மாநாட்டிற்குன் இந்தியா தலைமை தாங்குவதால் தான் சீன அதிபர் பங்கேற்கவில்லை எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் ரஷ்யா, சீனா அதிபர்கள் பங்கேற்காதது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன் (German Ambassador Philipp Ackermann) தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “டெல்லியில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் மற்றும் ரஷ்ய அதிபர் இல்லாததால் எந்த மாற்றமும் ஏற்படாது. ரஷ்ய அதிபர் புதின் (Putin), கடைசி உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்ளவில்லை, அது எதிர்பார்த்ததுதான். ஆனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) கலந்து கொள்ளாதது எங்களுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.
ஆனால் நான் ஒன்றைத் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன், சீன அதிபர் பங்கேற்காத நிலையில் சீன பிரதமர் ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார். இதனால் சீன அதிபர் இல்லாத தாக்கத்தை இது பெரிய அளவில் ஏற்படுத்தாது. சீனப் பிரதமர், சீனாவின் ஒரு நல்ல பிரதிநிதி. மாநாட்டில் அவர் தனது குரலை ஒலிக்கச் செய்வார்.
ஆப்பிரிக்க யூனியனை, புதிய உறுப்பினராக மேசையில் சேர்க்கும் இந்தியாவின் முயற்சியை நாங்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறோம். இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடுத்தபடியாக, இரண்டாவது பெரிய ஒன்றியமாக இருக்கும். நாங்கள் அதற்கு முற்றிலும் ஆதரவாக இருக்கிறோம். இந்தியாவின் தலைமைத்துவம் ஜி20 மாநாட்டை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளது; அதன் முடிவு அறிக்கையை ஜி20 நாடுகளின் பெரும்பாலான நாடுகள் ஒப்புக் கொள்ளும் என்று நம்புகிறோம்.
ஜி20 நாடுகளுக்கு தலைமை வகிப்பது என்பது அரசியல் ரீதியாக மிகவும் கடினமான பதவியாக இருக்கலாம். வார இறுதியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். இந்தியத் தரப்பு வெளியிடும் அறிக்கை பெரும்பாலான ஜி20 நாடுகளால் ஒப்புக்கொள்ளப்படலாம்.
இந்தியா இதற்கு முன் வேறு எந்த கூட்டமைப்பிற்கும் தலைமை வகித்ததில்லை; இருந்த போதிலும் ஜி20 நாடுகளுக்கு இந்தியா சிறப்பாக தலைமை வகித்துள்ளது. இது ஜி20-யை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளது என்று நான் நினைக்கிறேன். இந்தியா முழுவதும் 500 அமர்வுகள் நடைபெற்றுள்ளது. இந்திய அரசாங்கத்திற்கு எனது மரியாதையும் பாராட்டும் உரித்தானது” எனத் தெரிவித்துள்ளார்.
தலைநகரில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் 30க்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் அழைப்பு விடுக்கப்பட்ட விருந்தினர் நாடுகள் மற்றும் 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: G20 summit: இங்கிலாந்து பிரதமர் உள்பட உலகத் தலைவர்கள் இந்தியா வருகை!