சாப்ரா(பீகார்): உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் இருந்து வங்கதேசம் டாக்கா வழியாக அசாம் மாநிலம் திப்ருகரை 51 நாட்களில் சென்றடையும் எம்.வி.கங்கா விலாஸ் சொகுசு சுற்றுலா கப்பலை கடந்த 13ஆம் தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். 27 நதிகள் வழியாக, 5 மாநிலங்களைக் கடந்து, 3 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் சொகுசுக் கப்பல், காசிரங்கா தேசியப் பூங்கா உள்பட பல்வேறு உலக நினைவுச் சின்னங்களை கடந்து செல்கிறது.
36 பேர் வரை மட்டுமே பயணிக்கக் கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள சொகுசுக் கப்பலில், 18 சூட் ரூம்கள் உள்பட மூக்கில் விரல் வைக்கக் கூடிய வகையில் பல்வேறு வசதிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகின. ஒட்டுமொத்தமாக 54 நாட்கள் கப்பலில் பயணிப்பவர்களுக்கு 40 லட்ச ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி கட்டணமாக வசூலிக்கப்படும் என்ற செய்தி வெளியாகி பல்வேறு தரப்பினரை வியப்பில் ஆழ்த்தியது.
சுற்றுலா செல்வோருக்கு புதுவித அனுபவத்தையும், சொகுசு வாழ்க்கையின் உச்சத்தையும் எம்.வி. கங்கா விலாஸ் சொகுசு கப்பல் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. எம்.வி. கங்கா விலாஸ் சொகுசுக் கப்பலின் முதல் சுற்றுலா பயணத்தில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 32 பேர் பயணிக்கின்றனர்.
பீகார் மாநிலம், சாப்ரா பகுதிக்கு சென்ற கங்கா விலாஸ் சொகுசு கப்பல், கங்கை நதியில் போதிய தண்ணீர் இல்லாததன் காரணமாக கரைக்குச் செல்ல முடியாமல் நடுஆற்றில் மாட்டிக் கொண்டது. இதையடுத்து நடு ஆற்றில் சொகுசுக் கப்பல் நங்கூரமிடப்பட்டது. தொடர்ந்து சிறு மோட்டார் படகுகள் மூலம் சுற்றுலா பயணிகள் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின், டோரி கஞ்ச் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சிராந்த் தொல்லியல் தளத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
முன்னதாக மோட்டார் படகுகள் மூலம் கரைக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு, மேள தாளங்களுடன் உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பீகாரின் மற்றொரு சுற்றுலா நகரமான ஒபக்ஸருக்கு கங்கா விலாஸ் சொகுசு கப்பல் செல்கிறது.
இதையும் படிங்க: Priyanka Gandhi: கன்னட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் - பிரியங்கா காந்தி