டெல்லி: மனதின் குரல் நிகழ்ச்சியின் 95ஆவது ஒலிபரப்பில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று (நவம்பர் 27) உரையாற்றினார். அப்போது பிரதமர் பேசுகையில், இந்தோனேசியாவில் டிசம்பர் 1ஆம் தேதி ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது. இந்த மாநாட்டில் பங்கெடுக்கும் நாடுகளின் மக்கள்தொகை உலக மக்கள்தொகையின் மூன்றில் இரண்டு பங்காகும்.
உலக வர்த்தகத்தில் நான்கில் மூன்று பங்காகும். உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம் உடையவையாகும். இத்தனை பெரிய நாடுகளின் வல்லமை வாய்ந்த குழுவிற்கு இந்தியா தலைமை தாங்க இருக்கிறது. இது நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. இந்த பொறுப்பு நாட்டின் அமிர்தகாலத்தில் கிடைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
நாம் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, உலகளாவிய நன்மை மீது முழுகவனத்தையும் செலுத்த வேண்டும். அது உலக நன்மையாகட்டும், ஒற்றுமையாகட்டும், சுற்றுச்சூழல் தொடர்பான புரிந்துணர்வாகட்டும், நீடித்த வளர்ச்சியாகட்டும், இவற்றோடு தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வை காணவேண்டும். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று கொடுக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் ஜி20 கருப்பொருளிலிருந்து, உலகம் மீதான நம்முடைய அர்ப்பணிப்பை வெளிப்படுகிறது.
ஜி20 பொறுப்பை ஏற்ற உடன் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அது தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் நமது நாட்டின் மாநிலங்களுக்கு வரும் சந்தர்ப்பம் ஏற்படும். அப்போது நமது மாநிலத்தின் கலாச்சாரம், தனித்துவம், வரலாற்று சிறப்புகளை உலகின் பார்வைக்கு எடுத்துக் காட்டுவீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குஜராத் தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியால் பாஜகவுக்கு சவாலாக இருக்கும் 19 இடங்கள்..