புது டெல்லி: ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக 14 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 12 பேருக்கு நீதிமன்ற காவலும், 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம்: ஏப்.16ஆம் தேதி ஹனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அப்போது நாட்டின் பல்வேறு இடங்களில் ஊர்வலங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் டெல்லியில் ஊர்வலம் நடைபெற்றபோது வன்முறை வெடித்தது.
ஜஹாங்கீர்புரி வழியாக சென்ற ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தினர் மீது மறைந்திருந்து சிலர் கற்களால் தாக்கினர். இதையடுத்து இரு தரப்பினர் இடையே வன்முறை வெடித்தது. தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது.
வன்முறை- நீதிமன்ற காவல்: இதில் காவல் உதவி ஆய்வாளர் உள்பட போலீசார் சிலரும் காயமுற்றனர். இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்டதாக சிசிடிவி உதவியுடன் காவலர்கள் 14 பேரை கைது செய்தனர்.
அவர்கள் ஜாகித், முகம்மது அன்சார், சஜ்ஜத், முக்தியார் அலி, முகம்மது அலி, ஆமிர், அக்ஷார், நூர் ஆலம், முகம்மது ஆலம், ஜாகிர், அக்ரம், இம்தியாஸ், ஆஹிர் மற்றும் மற்றொரு முகம்மது அலி ஆகும். இந்த 14 பேரும் டெல்லி மாஜிஸ்திரேட் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.
அப்போது, 14 பேரில் முகம்மது ஆலம் மற்றும் முகம்மது அன்சார் ஆகிய இருவரையும் ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து மீதமுள்ள 12 பேருக்கும் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு- தடயங்கள் சேகரிப்பு: கைது செய்யப்பட்ட இந்த 14 பேரும் இன்று (ஏப்.18- திங்கள்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 147, 148, 149, 186, 356, 332, 323, 427, 436, 307 மற்றும் 120 (B) (குற்றச்சதி) ஆயுதச் சட்டம் 27 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 14 பேரும் அங்கிருந்த சிசிடிவி வாயிலாக சிக்கியுள்ளனர். மேலும் வன்முறையில் ஈடுபட்ட மற்ற நபர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் காவலர்கள் தேடிவருகின்றனர். இதற்கிடையில் தடயவியல் நிபுணர்களும் சம்பவ பகுதியில் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க : டெல்லி ஹனுமன் பேரணி கலவரம்: 14 பேர் கைது, நிலைமை என்ன?