புதுச்சேரி: வெளிநாடு வாழ் பிரெஞ்சு குடிமக்களுக்காக, பிரெஞ்சு குடிமக்கள் சபையை பிரான்ஸ் நாடு ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நடைபெறும் உள்ளாட்சி போன்ற அமைப்பு தான் இது. அந்தந்த நாடுகளில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகங்கள் தேர்தல் நடத்தி, இந்த சபைக்கான பிரெஞ்சு கவுன்சிலர்களை, தேர்வு செய்கின்றன.
இவர்களின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகளாகும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்களின் குறைகளை நேரடியாக பிரெஞ்சு துணை தூதரகத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண முயல்வார்கள்.
இந்தியாவில், பிரெஞ்சு கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க வசதியாக வட மாநிலங்கள், தென் மாநிலங்கள் என இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வட மாநில தொகுதியில் நான்கு கவுன்சிலர்களும், தென் மாநில தொகுதியில் மூன்று கவுன்சிலர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இவ்விரு தொகுதிகளுக்கு, கடைசியாக, 2014ஆம் ஆண்டில் கவுன்சிலர் தேர்தல் நடந்தது. இவர்களின் பதவிக் காலம் 2020ஆம் ஆண்டோடு முடிந்ததையொட்டி, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும், கவுன்சிலர் தேர்தல் இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்தியாவில் மே மாதம், கரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால், தேர்தல் நடக்கவில்லை.
இந்நிலையில் இந்திய பிரெஞ்சு கவுன்சிலர் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (நவம்பர் 7) நடந்து முடிந்தது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணி வரை தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பிரெஞ்ச் குடியுரிமை பெற்ற 4,600 பேர் புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் தூதரகத்தில் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீரில் மூழ்கிய தண்டவாளம் - சிரமத்திற்கு மத்தியில் ரயில் இயக்கம்