கோவிட்-19 இரண்டாம் அலையில் சிக்கி இந்தியா தவித்துவரும் நிலையில், சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிவருகின்றன. ஏற்கனவே, அமெரிக்கா, பிரிட்டன், சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உதவிய நிலையில், தற்போது ஃபிரான்ஸ் அரசும் உதவியளித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு தூதர் இமானுவேல் லேனைன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவுக்கு எட்டு ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள், 250 படுக்கைகள், இரண்டாயிரம் நோயாளிகளுக்கு உதவும்விதமாக திரவ ஆக்ஸிஜன், வென்டிலேட்டர், ஐசியு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்க ஃபிரான்ஸ் முன்வந்துள்ளது என்றார்.
இந்த இக்கட்டான சூழலில் ஃபிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் துணை நிற்கும் என ஃபிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஐந்து நாள்களாக நாள்தோறும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பாதிப்பு பதிவாகிவரும் நிலையில், பல்வேறு இடங்களில் ஆக்ஸிஜன், படுக்கைகள், மருந்துகள் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதையடுத்து தீவிரத்தன்மை அதிகமுள்ள இடங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை அனுப்ப அமெரிக்கா திட்டம்!