டெல்லி : முதலமைச்சர் நாற்காலிக்காக நிதிஷ் குமார் எதையும் செய்வார் என ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ராம்சந்திர பிரசாத் சிங் தெரிவித்து உள்ளார்.
பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து வந்தவர் ராம்சந்திர பிரசாத் சிங் என்ற ஆர்.சி.பி. சிங். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியில் முக்கியப்பொறுப்புகளை வகித்தவர். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஆர்.சி.பி. சிங் மத்திய உருக்குத் துரை அமைச்சராகவும் பதவி வகித்து உள்ளார்.
கட்சித் தலைவர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகியதும், அந்தப் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 ஆண்டுகள் தலைவர் பதவியில் நீடிப்பார் எனக் கூறப்பட்ட நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையில் ஆர்.சி.பி சிங் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர் பெயர்களில் பதிவு செய்துள்ள அசையா சொத்துகளில் உள்ள முரண்பாடுகள் பற்றி கட்சி, அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
மேலும் ஆர்.சி.பி. சிங் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து வெளியேறும் முடிவைக் கடந்த ஆண்டு அறிவித்தார். ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என்றும் கூறினார். சட்டப்பூர்வ முறையில் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நிதி நிலை திறன் அடிப்படையில் சொத்துகள் வாங்கப்பட்டு உள்ளன என அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் ஆர்.சி.பி. சிங்கை வைத்து பீகாரில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஆர்.சி.பி. சிங், தனிக்கட்சி தொடங்குவார் எனக் கூறப்பட்டது,
இந்நிலையில் அவர் பா.ஜ.க.வில் இணைந்து உள்ளார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் ஆர்.சி.பி. சிங் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.சி.பி சிங் கூறியதாவது, "பிரதமர் யார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். ஆனால், நிதிஷ் குமாரின் சூழலில் அவர் தான் பி.எம், அவர் என்றென்றும் பி.எம் ஆக இருப்பார்’ என்றார். இதில் பி.எம், என்பது பல்டி மர் எனக் கூறப்படுகிறது. அதாவது தன் நிலையில் அடிக்கடி முரண்பாடு கொண்டு இருப்பவர் என அர்த்தம் கூறப்படுகிறது.
தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் நாற்காலிக்காக நிதிஷ் குமார் என்ன வேண்டுமென்றாலும் செய்வார் என குற்றஞ்சாட்டினார். முதலமைச்சர் நாற்காலியை தக்கவைத்துக் கொள்ள கூட்டணிக் கட்சிகளை நிதிஷ் குமார் மாற்றிக் கொண்டு இருப்பதாகவும், மக்களின் நலனில் அவர் துளியும் அக்கறை கொள்ளவில்லை என்றும் ஆர்.சி.பி. சிங் தெரிவித்தார்.
இதையும் படிங்க : உத்தவ் தாக்ரே - சரத் பவார் - நிதிஷ் குமார் சந்திப்பு - பாஜகவுக்கு எதிராக திரளும் எதிர்க்கட்சிகள்!