புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் பா.கண்ணன் (வயது 71) நுரையீரல் தொற்று ஏற்பட்டு மூலக்குளம் East coast மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று (நவ. 5) இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.
புதுச்சேரி அரசியலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த கண்ணன், சபாநாயகர், அமைச்சர், எம்.பி என முக்கிய பதவிகள் வகித்து உள்ளார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய கண்ணன் இரண்டு முறை தனிக் கட்சி தொடங்கினார். தொடர்ந்து 2016ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.
அதன்பின் 2021ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து விலகிய கண்ணன், பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜகவில் தொடர்ந்து நீடித்து வந்த அவர், மணிப்பூரில் பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலை தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகினார். அதன் பின் அரசியல் களங்களை தவிர்த்து வந்த கண்ணன் உடல் நல்ப் பிரச்சினைகளால் அவதியடைந்தார்.
இந்நிலையில் தான், நுரையீரல் தொற்று சிகிச்சைகாக மூலக்குளம் East coast மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த கண்ணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பட்டாசு கடையா..? மிட்டாய் கடையா..? தீபாவளிக்கு புதிதாய் களமிறங்கி உள்ள பட்டாசு வடிவ மிட்டாய்கள்!