மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா 76 வயது மூப்பு காரணமாக நுரையீரல் அடைப்பு போன்ற பிரச்சினைகளைச் சந்தித்துவருகிறார். இந்தப் பிரச்சினை காரணமாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் கடுமையான மூச்சுத் திணறல் காரணமாகக் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்டஸ் மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டது.
அவருக்கு நுரையீரல் பாதிப்புகள் இருப்பதால் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை சிகிச்சையளிக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என உறுதியானது. இந்நிலையில், புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றமடைந்ததையடுத்து, அவர் மருத்துவமனையிலிருந்து இன்று (டிசம்பர் 15) வீடு திரும்பினார்.
சிகிச்சைக்கு ஏற்ப அவரது உடல்நிலை ஒத்துழைத்துவருவதால் தொடர்ந்து அவருக்கு வீட்டிலிருந்து ஸ்டீராய்டு மருந்துகள், பிசியோதெரபி அளிக்கப்படும். அவரது உடல் நிலைகுறித்து மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணிக்கும் என மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் 2000ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை முதலமைச்சராக புத்ததேவ் பட்டாச்சாரியா பதவி வகித்தார். மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிலிருந்து இறங்கியதும், புத்ததேவ் பட்டாச்சார்யா 2015ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். அதன்பின் 2018ஆம் ஆண்டு மாநிலச் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.