மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களான அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) சட்டம் 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்றையும் எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.
பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் மாதத்திலிருந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட 32 விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகரை முற்றுகையிட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறது. கடந்த நவ. 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் டெல்லி புராரி பகுதியில் 20 நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும், விவசாயிகள் தூதுக்குழுவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இருப்பினும், அந்த பேச்சுவார்த்தையில் தீர்வை இன்றுவரை எட்ட முடியவில்லை.
தொடர்ந்து போராட்டங்கள் அதிகரித்துவருவதால், நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்றுவருவதால் இந்திய அரசின் மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தை பாஜக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இந்த போராட்டத்தை மத்திய அரசுக்கு எதிராக வழிநடத்த காலிஸ்தான் அமைப்பும், மாவோயிஸ்ட் அமைப்பும் முயல்கிறது என்றும் பாகிஸ்தான் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
பாஜக தலைவர்களின் இந்த கருத்திற்கு ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,“ பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு, மாற்றுக் கருத்து கொண்ட மாணவர்கள் தேச விரோதிகள். குடிமக்கள் அர்பன் (நகர்ப்புற) நக்சல்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கோவிட்-19 தொற்றை பரப்புபவர்கள். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவர்கள் என யாரும் இல்லை. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் காலிஸ்தான் பிரிவினைவாதிகள். பெரும் முதலாளிகள் சிறந்த நண்பர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : விவசாயிகள் வேடத்தில் சிறுவர், சிறுமிகள் ஆர்ப்பாட்டம்