டெல்லி : ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு லுப்தான்சா விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து தாய்லாந்துக்கு புறப்பட்ட விமானம் பாகிஸ்தான் வான்பரப்பில் பறந்து கொண்டு இருந்த நிலையில், விமானத்தில் இருந்த தம்பதியிடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்து சக பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு உள்ளது. தம்பதியை சமாதானப்படுத்த விமான சிப்பந்திகள் முயற்சித்தும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், விமான கட்டாயம் தரையிறக்க வேண்டிய சூழல் நிலவியதாக சொல்லப்படுகிறது.
பாகிஸ்தான் வான்பரப்பில் விமானம் பறந்து கொண்டு இருந்த நிலையில், அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்க விமானிகள் பாகிஸ்தான் விமான கட்டுப்பாட்டு மையத்திடம் கோரி உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் விமான கட்டுப்பாட்டு மையம் லுப்தான்ஸா விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை தொடர்பு கொண்ட விமானிகள், நடந்தவற்றை கூறி அனுமதி கோரி உள்ளனர். டெல்லி விமான கட்டுப்பாட்டு அறை அனுமதி அளித்த நிலையில் உடனடியாக இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
சண்டையில் ஈடுபட்ட கணவரை விமான நிலைய போலீசாரிடம் விமானிகள் ஒப்படைத்த நிலையில், மீண்டும் விமானத்தை பாங்காக் நோக்கி புறப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்ட கணவரை டெல்லி விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றர். என்ன காரணத்திற்காக தம்பதி நடுவானில் சண்டையிட்டுக் கொண்டனர் என்பது குறித்து தகவலை லுப்தான்சா விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : உத்தராகண்ட் சுரங்கத் தொழிலாளர்களை மீட்டதில் முக்கிய பங்கு வகித்த ஆஸ்திரேலிய நபர்.. யார் இந்த அர்னால்ட் டிக்ஸ்?