சிம்லா: சுற்றுலாத் தலமான இமாச்சலப் பிரதேசத்தின் தர்ம சாலாவில் மேகத் திரள் வெடிப்பு (cloudburst) காரணமாக மிக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் மக்லியோட்கஞ்சின் பாக்சு நாக் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பல வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
சுற்றுலாத் தலமான அப்பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல்கள் இந்த பலத்த வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன. சிம்லாவின் தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. எனினும், மாநிலத்தில் உள்ள மஞ்சி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 26ஆம் தேதி தொடங்கும் தென்மேற்குப் பருவமழை, இந்த ஆண்டு 21 நாள்கள் முன்னதாக ஜூன் 13ஆம் தேதி அன்றே தொடங்கியுள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் (ஜூலை.14) வரை மாநிலத்தில் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இதேபோன்று பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது குறித்து பேசிய அலுவலர்கள், ”திடீர் வெள்ளத்தால் வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வீடுகளும் சேதமடைந்துள்ளன. மாநிலத் தலைநகரிலிருந்து 250 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள தர்மசாலாவில் 119 மி.மீ கனமழை பெய்துள்ளது. இந்தப் பருவமழையில் இதுவரை இந்த அளவு மழை பதிவாகவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த மேகத் திரள் வெடிப்பு குறித்துப் பேசிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் மன்மோகன் சிங், மாநிலத்தின் காங்க்ரா மாவட்டத்தில் பல இடங்களில் மிக அதிக அளவு மழை பெய்துள்ளதாகவும், பாலம்பூரில் 155 மிமீ மழை அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹிமாச்சலப் பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் வரும் நாள்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு, வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு!