சோனிபட் (ஹரியானா) : ஹரியானா மாநிலம் சோனிபட் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 44-இல் அமைந்துள்ள அபெக்ஸ் கிரீன் சொசைட்டியின் சி பிளாக்கில் உள்ள கட்டடத்தின் ஏழாவது மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால், பல குடும்பங்கள் கட்டடத்தில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகளில் சிக்கினர்.
சிறிது நேரத்தில் மளமளவென பற்றிய தீ, கட்டடத்தின் பல தளங்களை அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த சோனிபட் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீயை அணைக்கும் பணியில் உடனடியாக ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர், அதனை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டனர்.
மேலும் கட்டடத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் சிக்கியிருந்தவர்களையும் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். இந்நிலையில், செய்தியறிந்த மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சோனிபட் மேயர் நிகில் மதன் மற்றும் அவருடன் இருந்த பணியாளர்கள் தீயில் சிக்கிய குடும்பங்களை மீட்டனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சேலத்தில் 1,800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு..கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் அதிரடி
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து இன்னும் சரியாக அறியப்படவில்லை. மேலும், ஏழாவது மாடியில் சிக்கிய கர்ப்பிணி, அவரது மகள் மற்றும் அவரது கணவர் ஆகியோரை தீயணைப்புப் படையினர் தங்கள் உயிரை பணயம் வைத்து பத்திரமாக மீட்டனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், இந்த தீ விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டனர். தங்களிடம் நவீன கருவிகள் எதுவும் இல்லாததால் மீட்புப் பணிகளில் தடைகளை எதிர்கொள்வதாக சோனிபட் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதனிடையே பேசிய மேயர் நிகில் மதன், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு வருவதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய சோனிபட் துணை ஆணையர் மனோஜ் குமார், “தீ விபத்தால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. இதன் பின் தொடர்ந்து ஒவ்வொரு தளமும் சோதனை செய்யப்படும். தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது விசாரணைக்கு பிறகே தெரிய வரும். மேலும், தீயினால் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்தும் மதிப்பிடப்பட்டு வருகிறது" என்று கூறினார். தீபாவளியன்று ஏற்பட்ட இந்த தீ விபத்து, அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.