மும்பை: மசூதிகளில் உள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை மே3ஆம் தேதிக்குள் (அதாவது இன்று) மாநில அரசு அகற்றாவிட்டால் ஒவ்வொரு மசூதி முன்பும் ஹனுமன் சாலிஸா ஓதுவோம் என மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே அதிரடியாக அறிவித்தார்.
இது மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ராஜ் தாக்கரேவை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. இதற்கிடையில் நேற்று (மே2) மாநில உள்துறை அமைச்சர் பாட்டீல் காவல் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக மும்பையில் மே1ஆம் தேதி நிகழ்ச்சியொன்றில் பேசிய உத்தவ் தாக்கரே, “மாநிலத்தில் புதிய வாய்ச்சொல் வீரர்கள் முளைத்துள்ளனர். மக்கள் அவர்களை கண்டுகொள்ள மாட்டார்கள்.
ஏனெனில் அவர்களின் அரசியல் விளையாட்டு மராத்தி, இந்துத்துவா என மாறிமாறி தொடங்குகிறது. மேலும் இந்தப் பொழுதுபோக்கு காட்சிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. தற்போது மீண்டும் காணப்படுகின்றன” என எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில்தான் உள்துறை அமைச்சர் திலீப் வால்சே பாட்டீல் காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் பேசிய பாட்டீல், “ராஜ் தாக்கரேவின் பேச்சு சமூக நல்லிணத்துக்கு ஊறு விளைவிப்பது போல் உள்ளது” என்றார்.
இதைத் தொடர்ந்து, ராஜ் தாக்கரே மீது அவுரங்காபாத் சிட்டி சௌக் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மே3ஆம் தேதி ரம்ஜான் என்பதால் மசூதிகள் முன்பு ஹனுமன் சாலிஸா ஓதுவது மற்றும் மகா ஆரத்தி உள்ளிட்ட நிகழ்வுகளை ராஜ் தாக்கரே ஒத்திவைத்தார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் பகிர்ந்திருந்த விளக்க அறிக்கையில், “மே3ஆம் தேதி ரம்ஜான், அட்சய திருதியை மற்றும் பரசுராமர் ஜெயந்தி உள்ளிட்ட நிகழ்வுகள் வருகின்றன. ஆகையால் அந்நாளில் பக்தர்களுக்கு இடையூறு கொடுக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : Raj Thackeray cancels 'Maha Aarti': ராஜ் தாக்கரே கைதாக வாய்ப்பு!