பெல்லாரி: கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள குடாதினி பகுதியைச்சேர்ந்த 14 வயது சிறுமி, வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை ஓம்கார கவுடா (45)-க்கு தெரியவந்ததையடுத்து, காதலை கைவிடும்படி மகளை எச்சரித்துள்ளார். ஆனால், சிறுமி தொடர்ந்து அந்த இளைஞரை காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 31ஆம் தேதி, சினிமாவுக்கு செல்லலாம் என்று கூறி மகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்றுள்ளார். அவர்கள் திரையரங்கிற்குச்சென்றபோது, படம் ஏற்கெனவே தொடங்கியிருந்தது. அதனால் ஹோட்டலுக்கு அழைத்துச்சென்று சாப்பாடு வாங்கிக்கொடுத்துள்ளார்.
பிறகு இருவரும் கோயிலுக்குச்சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர், நகைக்கடைக்கு அழைத்துச்சென்று மகளுக்கு மோதிரம் வாங்கிக்கொடுத்துள்ளார். அவர்கள் வீடு திரும்பும்போது மாலையாகிவிட்டது.
ஓம்கார கவுடா, மகளை துங்கபத்ரா ஹெச்எல்சி கால்வாய் அருகே அழைத்துச்சென்று நிற்க வைத்துவிட்டு, சிறிது நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து பின்பக்கமாக வந்த கவுடா, மகளை கால்வாயில் தள்ளிவிட்டுள்ளார். தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட சிறுமி, "அப்பா... அப்பா" என்று அலறியபடி உயிரை விட்டார்.
அதன்பிறகு ஓம்கார கவுடா, தனது இருசக்கர வாகனத்தை நண்பர் பீமப்பா வீட்டில் விட்டுவிட்டு, ரயில் ஏறி திருப்பதிக்குச்சென்றார். இதனிடையே நவம்பர் 1ஆம் தேதி, தனது கணவர் மற்றும் மகளை காணவில்லை என சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், திருப்பதியிலிருந்து திரும்பும்போது கொப்பல் அருகே ஓம்கார கவுடாவை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். விசாரணையில், கைது செய்யப்பட்ட ஓம்கார கவுடா தனது மகள் பெயரில் 20 லட்சம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்து வைத்திருந்ததாகவும், கொலை செய்வதற்கு முன், நண்பர் பீமப்பாவின் உதவியுடன் அதை வேறு கணக்கிற்கு மாற்றியிருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சிறுமி கொலைக்கு உடந்தையாக இருந்ததாக பீமப்பாவையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியின் உடலை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:சாரோனை கொல்ல 10 முறை முயற்சி... காதலியின் பகீர் வாக்குமூலம்!