டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 40 நாள்களுக்கு மேலாக போராடிவருகின்றனர். ஆனால், விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்திலும் மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் நிதி ஆலோசகரும், பயங்கரவாதியுமான குர்பத்வந்த் சிங் பன்னுவுக்கு டெல்லி போராட்டத்தில் பங்களிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் நான்கு பேரின் மூலம் டெல்லி போராட்டத்தில் மறைமுக வேலைகளை செய்வதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பஞ்சாப்பை சேர்ந்த நான்கு பேருக்கு தேசிய புலனாய்வு அமைப்பினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கிடைத்த தகவலின்படி, பஸ் ஆபரேட்டர், நட் போல்ட் வர்த்தகர், கேபிள் ஆபரேட்டர், பத்திரிகையாளர் என நான்கு பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் மூன்று பேர், விவசாயிகளுக்கு பேருந்துகள் ஏற்பாடு செய்து போராட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு அனுப்பியுள்ளனர். நான்கு பேரிடமும் தீவிர விசாரணை நடத்திட தேசிய புலனாய்வு அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.