டெல்லியின் எல்லைப் பகுதிகளில் வேளாண் சட்டங்களை எதிர்த்து உழவர்கள் கடந்த 100 நாள்களாக போராடிவருகின்றனர். இந்நிலையில், உரிமைகளுக்காகப் போராடும் உழவர்களை அரசு கொடுமைப்படுத்துவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டின் எல்லையில் தங்களின் வாழ்க்கையையே தியாகம் செய்பவர்களின் மகன்களுக்காக டெல்லியின் எல்லைகளில் இரும்பு முள்கள் பதிக்கப்பட்டுள்ளன. உழவர்களோ தங்களின் உரிமைகளைக் கேட்கின்றனர். அரசோ கொடுமைப்படுத்துகிறது" எனப் பதிவிட்டுள்ளார்.
குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் பல முயற்சிகளின் ஈடுபட்டனர்.
டெல்லியுடனான உத்தரப் பிரதேச எல்லைப்பகுதியில் தடுப்பு வேலி அமைத்து உழவர்களை உள்ளே நுழைய முடியாதவாறு செய்தனர்.
டெல்லி - ஹரியானா எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட தடுப்புகளுக்கிடையே இரும்புக் கம்பியை இணைத்து போராட்டக்காரர்களின் நடமாட்டத்தை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.