ஃபரிதாபாத்: ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஆட்டோ ஓட்டுநருமான அனுஜ், தனது ஆட்டோவையே மினி பூங்காவாக மாற்றிவிட்டார்.
ஆட்டோவில் பல்வேறு வகையான தொட்டிச்செடிகளை நட்டு பராமரித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக செயற்கையான செடிகளையும் வைத்துள்ளார். செடிகளுக்கு சூரிய ஒளி கிடைப்பதற்காக சன் ரூஃப் மற்றும் வாடிக்கையாளர்கள் வசதிக்காக நான்கு சிறிய மின்விசிறிகளையும் ஆட்டோவில் பொருத்தியுள்ளார்.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் அனுஜிடம் கேட்டபோது, "ஹரியானாவை மாசுபாடு இல்லாத மாநிலமாக மாற்ற, அரசு மரக்கன்றுகளை நட்டு வருகிறது. அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். எனது ஆட்டோவில் செடிகளை வைத்து அலங்கரித்து வாடிக்கையாளர்களுக்கு நல்லச் சூழலை ஏற்படுத்தியிருக்கிறேன்.
அதேநேரம் அதற்காக கட்டணத்தை உயர்த்தவில்லை. வாடிக்கையாளர்கள் யாராவது அவர்களது உடமைகளை எனது ஆட்டோவில் விட்டுச்சென்றால், இந்த செடிகளை வைத்து எளிதில் ஆட்டோவை அடையாளம்கண்டு கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.
இந்த ஆட்டோவில் பயணிக்கும்போது, ஆட்டோவில் செல்வதுபோல இல்லை, தோட்டத்தில் இருப்பது போலவே தோன்றுகிறது எனப் பயணிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:3 ஆண்டுகளுக்குப் பின் பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!