மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகதி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்தக் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ள நிலையில், சிறுபாண்மை நலத்துறை அமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவாப் மாலிக் உள்ளார். இவர் மீது எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் பரபரப்பு புகார் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பட்னாவிஸ் பகிர் புகார்
மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த பட்னாவிஸ், "நவாப் மாலிக் 16 ஆண்டுகளுக்கு முன் சாலிடஸ் இன்வெஸ்மென்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, குர்லா என்ற பகுதியில் நிலம் வாங்கியுள்ளார். இந்த ஒப்பந்தம் சலிம் இஷ்ஹாக் மற்றும் சர்தார் ஷாவலி கான் ஆகிய இருவருடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளிகள். 1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய சலிம் ஆயுள் தண்டனை கைதி ஆவார்.
மும்பை மக்களை கொன்றவர்களுடன் நவாப் மாலிக் வணிக ஒப்பந்தம் செய்ய என்ன தேவை இருக்கிறது. தேச விரோத சக்திகளுடன் தொடர்புடைய நவாப் மாலிக் பதவி விலகவேண்டும்" என்றார். மேலும், இது தொடர்பான ஆதாரங்களை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரிடம் தரவுள்ளதாக பட்னாவிஸ் கூறினார்.
இதையும் படிங்க: இந்தி தெரியாது அமித் ஷா - மிசோராம் முதலமைச்சர் கடிதம்